நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதால் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது அமைச்சர் பேச்சு

நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதால் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையே இருக்காது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2019-09-28 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி, சோமூர், நெரூர் வடபாகம் மற்றும் வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 63 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்தார். இதில் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி பகுதியில் அரசு காலனியில் ரூ.11 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நியாவிலைக்கடைக்கான சேமிப்பு கிடங்கு, அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளி முதல் சுகாதார வளாகம் வரையில் ரூ.11½ லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டுவது உள்ளிட்ட பணிகள் குறிப்பிடத்தக்கது. மேலும் சோமூர் ஆதிதிராவிடர் காலனியில் புனரமைக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார்.

குடிநீர் தொட்டி

இதையடுத்து, பஞ்சமாதேவியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் ரூ.82 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப் பணித்து, அமைச்சர் பேசியதாவது:-

மின்னாம்பள்ளி பஞ்சமாதேவியில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக தெரிவித்தார்கள். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர் களுடன் கலந்து ஆலோசித்து, ஆய்வு செய்யப்பட்டு இப்பகுதிக்கு 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்தொட்டி கட்ட முடிவுசெய்யப்பட்டது. இந்த தொட்டியில் இருந்து 3 குழாய்கள் அமைக்கப்பட்டு, 3 மோட்டார்கள் பொருத்தப்பட்டு மின்னாம்பள்ளி பஞ்சமாதேவியைச் சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கதவணை ஆய்வுக்கு ரூ.50 லட்சம்

கரூர் மாவட்டத்தில் மாயனூரில் ஏற்கனவே ஒரு கதவணை உள்ளது. புகளூரில் புதிய கதவணை கட்ட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், குளித்தலை மற்றும் நெரூர் பகுதிகளில் கதவணை கட்ட முதற்கட்ட ஆய்விற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கியுள்ளார்கள். இதுதவிர மேலும் ஒரு கதவணை கட்டுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது கரூர் மற்றும் குளித்தலை நகராட்சிகளில் குடிநீர் திட்டப்பணிகளிகளுக்கென்று அதிக அளவிலான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இனிவரும் காலங்களில் கரூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையே இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கீதா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கரூர் மாவட்ட கூட்டுறவு அச்சக சங்க தலைவர் மார்கண்டேயன் மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மனோகரன், வட்டாட்சியர்(மண்மங்கலம்) செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்