சட்டசபை தேர்தலை தனித்து சந்திக்க தயாராகும் பா.ஜனதா: சிவசேனா இன்று அவசர ஆலோசனை
மராட்டிய சட்டசபை தேர்தலை தனித்து சந்திக்க பா.ஜனதா தயாராகி வருகிறது. இந்த நிலையில் சிவசேனா கட்சி சார்பில் இன்று அவசர ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் அறிவித்தன. ஆனால் சரிசம தொகுதியை சிவசேனா கேட்பதால் தொகுதி பங்கீட்டில் இரு கட்சிகள் இடையே இழுபறி நீடிக்கிறது.
இந்த நிலையில் டெல்லியில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா கட்சி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது சிவசேனாவுக்கு 120 தொகுதிகள் தான் கொடுக்க முடியும் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சிவசேனா உடன்பட்டதாக தெரியவில்லை. இதனால் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட பா.ஜனதா தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.
இதேபோல சிவசேனாவும் தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆலோசிக்க அந்த கட்சி இன்று (சனிக்கிழமை) அவசர ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து உள்ளது. அப்போது பா.ஜனதா ஒதுக்கும் தொகுதிகளை ஏற்றுக்கொண்டு கூட்டணி வைத்து போட்டியிடுவதா? அல்லது 288 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்துக்கு கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்கள் என பலதரப்பினர் அழைக்கப்பட்டு உள்ளனர். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் எடுக் கப்படும் முடிவை பொறுத்து பா.ஜனதா, சிவசேனா கூட்டணி நீடிக்குமா? அல்லது முறியுமா? என்று தெரிய வரும்.