அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால்களை தூர்வார வேண்டும் - விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
கரூர் அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந் திரன் தலைமை தாங்கி, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். அப்போது, கரூர் சுங்ககேட்டை சேர்ந்த விவசாயி சண்முகம் பேசுகையில், திருப்பூர் அணையிலிருந்து கரூர் அமராவதி ஆற்றில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டு சென்று கொண்டிருக்கிறது. ஆனால் கரூரில் உள்ள திருமாநிலையூர், செல்லாண்டிபாளையம், ராயனூர் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. எனவே அதில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருமாநிலையூர் பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் பஸ்பாடி கண்ணாடி மற்றும் சாயக்கழிவுகளை சிலர் கொட்டி விட்டு செல்கின்றனர். இது குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுகளை அப்புறப்படுத்திட வேண்டும். தாந்தோன்றி ஒன்றியத்துக்கு உட்பட்ட அருகம்பாளையம் பகுதியிலுள்ள குளம் மற்றும் அதன் நீர்வழிப்பாதையை காணவில்லை. அதனை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறினார்.
கடவூரை சேர்ந்த விவசாயி வி.கே.தங்கவேல் பேசுகையில், பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரியாற்று உபரிநீரை ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு வந்து சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் வெள்ளியணை பெரியகுளம், தாதம்பாளையம் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரிட வேண்டும் என்று தெரிவித்தார். கரூர் காகித ஆலை கழிவுநீர் புகளூரான் வாய்க்காலில் திறந்த விடப்படுவதால் விவசாயிகளுக்கு பல்வேறு சிரமம் ஏற்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் மாசடைகிறது. எனவே அதனை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி விவசாயிகள், பாட்டிலில் கழிவுநீரை பிடித்து வந்து மாவட்ட வருவாய் அதிகாரியிடம் காண்பித்தனர்.
இதேபோல் பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டத்தில் விவசாயியின் வயது வரம்பினை 60 ஆக உயர்த்த வேண்டும். விவசாய பயன்பாட்டுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மானியம் வழங்கிட வேண்டும். கூடலூர் பகுதியில் விவசாய நிலங்களுக்கு அருகில் பழுதடைந்த மின்கம்பிகளை சீர்செய்ய வேண்டும். இந்த ஆண்டு தொடர் வறட்சி நிலவியதன் காரணமாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆண்டிபாளையம் நல்லுசாமி, நல்லாகவுண்டன்பட்டி நாகராஜ், மகாதானபுரம் ஜெயபால், கீழவெளியூர் ராஜூ உள்ளிட்ட விவசாயிகள் பேசினர். முடிவில் இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி பதில் கூறினார். இந்த கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குனர் வளர்மதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குழந்தைவேலு, வருவாய் கோட்டாட்சியர்கள் சந்தியா (கரூர்), கணேஷ் (குளித்தலை) உள்பட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.