புதுக்கோட்டை சிப்காட் அருகே, மண் சரிந்து விழுந்து 2 பேர் பலி - கட்டிடம் கட்டும் பணியின் போது பரிதாபம்

புதுக்கோட்டை சிப்காட் அருகே கட்டிடம் கட்டுமான பணியின்போது மண் சரிந்து விழுந்ததில், அதில் சிக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-09-27 23:00 GMT
அன்னவாசல், 

புதுக்கோட்டை சிப்காட் அருகே உள்ள முத்துடையான்பட்டியில் பழனிவேல் என்பவருக்கு சொந்தமான கல் உடைக்கும் கிரஷர் ஒன்று உள்ளது. இங்கு புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு வரும் ஒரு பகுதியில் மண் குவிந்து இருந்தது. நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

கட்டுமான பணிகளை, பழனிவேல் மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மண் சரிந்து, அங்கு நின்று கொண்டிருந்த கிரஷர் உரிமையாளர் பழனிவேல் (வயது 60), காவேரிநகரை சேர்ந்த ராசு மனைவி செல்வி (50), மேலமுத்துக்காடு மூக்கையா மனைவி மாரிக்கண்ணு (37) புதுக்கோட்டை அடப்பன்வயல் ரவிச்சந்திரன் மகன் மணிகண்டன் (32) ஆகியோர் மீது விழுந்தது.

இதில் கிரஷர் உரிமையாளர் பழனிவேல் மண்ணுக்குள் புதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் மண்ணுக்குள் சிக்கிய செல்வி, மாரிக்கண்ணு, மணிகண்டன் ஆகியோரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே செல்வி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து மாரிக்கண்ணு மற்றும் மணிகண்டன் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளனூர் போலீசார், பழனிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை சிப்காட் அருகே கட்டிடம் கட்டுமான பணியின்போது மண் சரிந்து விழுந்த விபத்தில் கிரஷர் உரிமையாளர் உள்பட 2 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்