காகித பைகள் தயாரிக்கும் 2-ம் நிலை எந்திரங்கள் அனுப்பி ரூ.16 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

காகித பைகள் தயாரிக்கும் 2-ம் நிலை எந்திரங்களை அனுப்பி ரூ.16 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன தலைவர், விற்பனை மேலாளர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-27 22:45 GMT
திருவண்ணாமலை,

திருப்பூர் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 42). இவர் திருப்பூர் நகரில் காகித பைகள் தயாரித்து சந்தைப்படுத்தும் சுய தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய நிறுவனத்திற்கு தேவையான எந்திரங்கள் மற்றும் உதரி பாகங்கள் வாங்குவதற்காக கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் நிறுவனத்தின் தலைவர் விஜயகுமார் (41) மற்றும் அதன் விற்பனை மேலாளர் சூரிபன்னீர்செல்வம் (38) ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது எந்திரம் மற்றும் அதற்கு தேவையான உதிரிபாகங்கள் வாங்க ரூ.16 லட்சத்து 34 ஆயிரம் ஆகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து செந்தில் ரூ.16 லட்சத்து 34 ஆயிரத்தை விஜயகுமாரின் தனியார் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.

அதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி செந்திலுக்கு விஜயகுமாரின் தனியார் நிறுவனத்தின் மூலம் 2 லாரிகளில் எந்திரங்கள் பல பாகங்களாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. அந்த எந்திரங்களை முழுமையாக நிறுவ அந்த நிறுவனத்தில் இருந்து 2 பேர் வந்தனர். உரிய உதிரிபாகங்கள் இல்லாததால் அவர்கள் எந்திரங்களை முழுமைபடுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பின்னர் செந்தில் லாரிகளில் வந்த எந்திரங்களை பார்வையிட்டார். அதில் அனைத்தும் 2-ம் நிலை எந்திரங்கள் என்பது அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமார், சூரிபன்னீர்செல்வத்திடம் ஏன் 2-ம் நிலை எந்திரங்கள் அனுப்பி வைத்து ஏமாற்றினீர்கள் என்று கேட்டு பணத்தை திரும்ப கேட்டு உள்ளார்.

கடந்த 2 மாதங்களாக அவர்கள் செந்திலை கண்டு கொள்ளாமல் இருந்து உள்ளனர். இதையடுத்து கடந்த 26-ந் தேதி திருவண்ணாமலைக்கு நேரில் வந்த செந்தில், விஜயகுமார் மற்றும் சூரிபன்னீர்செல்வத்திடம் பேசியுள்ளார். அப்போது அவர்கள் செந்திலை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து செந்தில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விஜயகுமார் மற்றும் சூரிபன்னீர்செல்வம் ஆகியோர் காகித பைகள் தயாரிக்கும் எந்திரங்கள் அனுப்பி வைப்பதாக செந்திலுக்கு 2-ம் நிலை காகித பைகள் தயாரிக்கும் எந்திரங்கள் அனுப்பி வைத்ததும், செந்திலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் மற்றும் சூரிபன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்