கடற்கரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட வெளிநாட்டினர்; ஒரு டன் குப்பைகள் அகற்றம்

புதுவை கடற்கரையில் வெளிநாட்டினர் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சுமார் ஒரு டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

Update: 2019-09-27 22:45 GMT
புதுச்சேரி,

பருவநிலை மாறுபாடு, சுற்றுப்புற சூழல் மாசு போன்றவை தற்போது மிக முக்கிய பிரச்சினையாக பேசப்பட்டு வருகின்றன. சுற்றுப்புற சூழல் மாசுபடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஹைடிசைன் நிறுவனம் சார்பில் நேற்று புதுவை கடற்கரையில் தூய்மைப்பணி நடந்தது. ஹைடிசைன் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு தன்னார்வல தொண்டு நிறுவனங்களை சேர்ந்த வெளிநாட்டவரும் இந்த தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இப்பணியை கடற்கரைக்கு வந்தவர்கள் பாராட்டினர்.

மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடந்த இந்த தூய்மைப்பணியில் 80 தன்னார்வலர்களுடன் புதுவை நகராட்சி துப்புரவு பணியாளர்களும் ஈடுபட்டனர். அப்போது சுமார் ஒரு டன் அளவுக்கு குப்பைகள் அகற்றப்பட்டன. குறிப்பாக பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலித்தின் பைகள், மதுபாட்டில்கள் போன்றவை அகற்றப்பட்டன. புதுவை மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல கடைகளில் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும், கடற்கரை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருவதை தடுத்து நிறுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்