தூத்துக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - தந்தை நினைவு நாளில் பரிதாபம்

தூத்துக்குடியில் தந்தை நினைவு நாளில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-09-27 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆரோக்கியபுரம் ஏ.சண்முகபுரத்தை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் அருள்ராஜ் (வயது 31). கட்டிட தொழிலாளி.

பால்ராஜ் கடந்த ஆண்டு தனது வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் தந்தை மீது அதிக பாசம் கொண்ட அருள்ராஜ், அவரது இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

பால்ராஜின் முதலாமாண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட இருந்தது. இந்த நிலையில் தந்தையின் மறைவால் மனவேதனையில் இருந்து வந்த அருள்ராஜ், தனது தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அதே மரத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை இறந்த நாளில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்