மராட்டிய சட்டசபை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
மராட்டிய சட்டசபைதேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
மும்பை,
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 9-ந்தேதியுடன் முடிவு பெறுகிறது. அதற்குள் தேர்தல் நடத்தி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும்.
இந்தநிலையில் அடுத்த மாதம்(அக்டோபர்) 21-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று கடந்த சனிக்கிழமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. நடத்தை விதிமுறைகள் மீறப்படுகின்றனவா? என்று தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மராட்டிய சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அக்டோபர் 4-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. மறுநாள் 5-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். 7-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும்.
21-ந் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக் கும் வாக்குப்பதிவு நடை பெறும். பதிவான வாக்குகள் 24-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேசியவாத காங்கிரசை சேர்ந்த உதயன் ராஜே போஸ்லே, சமீபத்தில் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் காலியான சத்தாரா நாடாளுமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சட்டசபை தேர்தல் அட்டவணை அடிப்படையிலேயே சத்தாரா நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வேட்பு மனு செய்ய வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
மேலும் வேட்பு மனு தாக்கல் நடைபெறும் தேர்தல் அதிகாரி அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.