விழுப்புரம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் அபாயம்: மாரியம்மன் கோவிலை பூட்டி ‘சீல்’ வைப்பு - அதிகாரிகள் நடவடிக்கை

விழுப்புரம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மாரியம்மன் கோவிலை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2019-09-26 21:45 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் பம்பை ஆற்றங்கரையில் ஊத்துக்காட்டு ரேணுகை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு கோவில் திரு விழாவை நடத்துவதில் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அமைதிக்கூட்டம் நடத்தப் பட்டது. அதில் வைகாசி மாதத்தில் ஒரு தரப்பினரும், ஆடி மாதத்தில் மற்றொரு தரப்பினரும் திருவிழாவை நடத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த வைகாசி மாத திருவிழாவை ஒரு தரப்பினர் நடத்தி முடித்தனர். ஆடி மாதம் மற்றொரு தரப்பினர் திருவிழா நடத்துவதற்கு அவர்கள் கோவில் சாவியை கொடுக்கவில்லை. அதன்பிறகு கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்ததன்பேரில் அதிகாரிகளின் தலையீட்டால் மற்றொரு தரப்பினர் ஆடி மாத திருவிழாவை நடத்தி முடித்து கோவில் சாவியை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

சில நாட்கள் கழித்து மீண்டும் கோவிலை சொந்தம் கொண்டாடிய ஒரு தரப்பினர், தாசில்தாரிடம் பூஜை செய்ய வேண்டும் என கூறி சாவியை வாங்கிக்கொண்டனர். பின்னர் பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டனர்.

இதற்கிடையே மற்றொரு தரப்பினர் கோவிலில் பொங்கல் வைக்க சென்றனர். அப்போது கோவிலில் பூட்டு போடப்பட்டிருந்தது. இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, இக்கோவிலை கட்டியது நாங்கள் தான், எங்களுக்கு தான் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மேலும் ஒரு பூட்டை போட்டுள்ளனர். இந்த சம்பவத்தினால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் அபாயம் உருவானது.

இது பற்றி அறிந்ததும் நேற்று காலை விக்கிரவாண்டி தாசில்தார் பார்த்திபன் உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் விஜயன் தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று அந்த கோவிலை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கோவில் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்