குடியாத்தம்-சித்தூர் சாலையை சீரமைக்கக்கோரி நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர்

குடியாத்தம் - சித்தூர் சாலையை சீரமைக்கக்கோரி நாற்றுநடும் போராட்டத்தில் பா.ம.க.வினர் ஈடுபட்டனர்.

Update: 2019-09-26 22:30 GMT
குடியாத்தம், 

குடியாத்தம் - சித்தூர் சாலையில் பரதராமி வரை தமிழக எல்லைப்பகுதி உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்கிறது.

குடியாத்தத்தை அடுத்த ராமாலை தண்ணீர் பந்தலில் தொடங்கி பரதராமி வரை சாலையில் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தற்போது மழை பெய்து சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மேடு, பள்ளம் தெரியாமல் தொடர்ந்து சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் நெடுஞ்சாலைத்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் சாலையை சீரமைக்கக்கோரி புகார் தெரிவித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் பா.ம.க. சார்பில் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி கிராமம் அருகே சித்தூர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கியுள்ள தண்ணீரில் நாற்றுநடும் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி, மத்திய மாவட்ட செயலாளர் கே.வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் ஜி.சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் ஜி.கே.செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் லாவண்யா, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜீவரத்தினம் ஸ்ரீராமுலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது பெண்கள் நாற்று மற்றும் தென்னங்கன்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பிரதீப், காமராஜ், கோபி, நிர்வாகிகள் கலைமணி, அரவிந்த், மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்