பொங்கலூரில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
பொங்கலூரில் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தி கொள்ளைடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பொங்கலூர்,
பொங்கலூரில் கோவை-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள சக்திநகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் முன் பகுதியில் அந்த வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. சம்பவத்தன்று இந்த ஏ.டி.எம். மையத்தின் ஷட்டர் பாதி மட்டும் மூடிய நிலையில் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளரும், ஊழியர்களும் ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை வங்கி மேலாளர் ஆய்வு செய்தார். அப்போது சம்பவத்தன்று இரவு அந்த ஏ.டி.எம். மையத்திற்குள் நுழையும் ஆசாமி ஒருவர், தான் கொண்டு வந்த கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தி திறக்க முயற்சிப்பது தெரியவந்தது. பின்னர் அந்த ஆசாமியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து வெளியே வந்து ஏ.டி.எம்.ன் ஷட்டரை பாதி அளவு கீழே இறக்கி விட்டு அங்கிருந்து சென்றதும் தெரியவந்தது. இந்த கொள்ளை முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வங்கியின் மேலாளர் பங்கஜ் ஆரியா அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வங்கயில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள ஆசாமி குறித்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் திருப்பூர் ரெயில் நிலையத்தில் அவினாசிபாளையம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொங்கலூரில் உள்ள ஏ.டி.எம்.எந்திரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆசாமியின் உருவமும், ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஆசாமியின் உருவமும் ஒன்று பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த ஆசாமியை பிடித்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் பிஜபூர் பகுதியை சேர்ந்த பிட்டோ சேத் என்பவரது மகன் மோகன் சேத்(வயது26) என்றும், தற்போது பொங்கலூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர், பொங்கலூரில் உள்ள வங்கியின் ஏ.டி.எம்.எந்திரத்தை சேதப்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறியதை தொடர்ந்து போலீசார், அவரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.