கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் பங்குதாரர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் பங்குதாரர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்து உள்ளது என்று அதன் தலைவர் கூறினார்.

Update: 2019-09-26 22:45 GMT
கும்பகோணம்,

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் 115-வது ஆண்டு பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நிதி நிறுவனத்தின் தலைவர் ராம.ராமநாதன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

நிகர லாபம்

கடந்த 2017-18- ம் ஆண்டில் ரூ.49.59 கோடியில் இருந்த நிகர லாபம் இந்த ஆண்டு ரூ.60.39 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டில் ரூ.167.55 கோடியாக இருந்த மொத்த காப்பு பண இருப்பு இந்த ஆண்டு ரூ.203.92 கோடியாகவும், ரூ.2 ஆயிரத்து 209 கோடியாக இருந்த வைப்பு நிதி இந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்து 297 கோடியாக உயர்ந்துள்ளது.

பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ஆண்டு இறுதியில் ரூ.1,971 கோடியாக இருந்தது. தற்போது ரூ.2 ஆயிரத்து 86 கோடியாக உயர்ந்துள்ளது.

பங்கு லாபம்

நிறுவனத்தின் பங்கு மூலதனம் ரூ.29.54 கோடியாகவும், பங்குதாரர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 80 ஆயிரத்தையும் கடந்துள்ளது. பங்கு லாபத்தை பொறுத்தவரை கடந்த 7 ஆண்டுகளாக பங்குதாரர்களுக்கு 22 சதவீதத்தை பங்கு லாபமாக கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் வழங்கி வருகிறது.

2018-19 ம் நிதியாண்டில் பங்குதாரர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பங்கு லாபமாக 22 சதவீதம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்காக நமது நிதி நிறுவனம் சுமார் ரூ.8 கோடி அளிக்க உள்ளது. இனி வரும் ஆண்டுகளிலும் இதே வகையில் பங்குதாரர்களுக்கு கூடுதலாக பங்கு லாபம் வழங்க நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

புதிய கிளைகள்

இந்த நிறுவனத்தின் புதிய கிளைகள் குத்தாலம், நன்னிலம், ஊட்டி, தென்காசி, மதுரை, புரசைவாக்கம், திருக்கோவிலூர், திருவேற்காடு, காங்கேயம், அறந்தாங்கி, சோழிங்கநல்லூர், மற்றும் சென்னை செங்குன்றம் ஆகிய ஊர்களில் திறக்க மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த ஊர்களில் விரைவில் புதிய கிளைகள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறுஅவர் பேசினார்.

கூட்டத்தில் இயக்குநர்கள் நரசிம்மன், மெய்யப்பன், தலைமை செயல் அலுவலர் கனகராஜ், பொதுமேலாளர் பத்மநாபன், உதவி பொது மேலாளர்கள் வெங்கடேசன், சக்கரபாணி, மண்டல மேலாளர்கள் சுபாஷ், ரமேஷ், வரதன், ஆலோசகர் ஸ்ரீராம், செயலாளர் நித்யா மற்றும் நிதியின் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்