பி.எம்.சி. வங்கியின் செயல்பாடு முடக்கம்: ‘ரிசர்வ் வங்கி முன்கூட்டியே ஏன் எங்களை எச்சரிக்கவில்லை’ வாடிக்கையாளர்கள் ஆவேசம்
‘‘பி.எம்.சி. வங்கியில் முறைகேடு நடந்தது பற்றி ரிசர்வ் வங்கி ஏன் முன்கூட்டியே எங்களை எச்சரிக்கவில்லை’ என வாடிக்கையாளர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
மும்பை,
மும்பையை தலைமையிடமாக கொண்டு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு(பி.எம்.சி.) வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பல்வேறு முறைகேடு கள் நடந்ததாக வந்த புகாரை அடுத்து ரிசர்வ் வங்கி பி.எம்.சி. வங்கியின் அனைத்து பரிவர்த்தனைகளையும் 6 மாதத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி அனுப்பிய நோட்டீசில் கடந்த திங்கட்கிழமை (23-ந்தேதி) முதல் 6 மாதத்துக்கு பி.எம்.சி. வங்கியின் அனைத்து பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.1,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படு வார்கள்.
இந்த நோட்டீசை தொடர்ந்து இந்த வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் 6 மாதத்தில் வங்கியின் செயல்பாடுகள் பழைய நிலைக்கு திரும்பும் என்றும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று பி.எம்.சி. வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாய் தாமஸ் கூறியுள்ளார்.
எனினும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை குறித்த தகவலை அடுத்து பி.எம்.சி. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுக்கவும், அடகு வைத்திருந்த நகைகளை திருப்பவும், லாக்கர்களில் வைத்திருந்த ஆவணங்களை எடுக்கவும் வங்கி கிளைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பி.எம்.சி. வங்கி கிளைகள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து முல்லுண்டு வங்கி கிளை முன்பு நின்று இருந்த புற்றுநோய் பாதித்த வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது:-
புற்று நோயால் பாதிக்கப்பட்ட நான் அப்பலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவ சிகிச்சைக்காக ரூ.25 ஆயிரம் எடுக்க வந்திருக்கிறேன். ஆனால் ரூ.1,000 மட்டுமே எடுக்க முடியும் என்கின்றனர். இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி ஒஷிவாராவை சேர்ந்த பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், பி.எம்.சி. வங்கியில் முறைகேடுகள் நடப்பது தெரிந்து இருந்தும் அது குறித்து ரிசர்வ் வங்கி ஏன் எங்களை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யவில்லை, என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இதுபோல மற்ற வாடிக்கையாளர்கள் கூறுகையில், ‘இது மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல உள்ளது’ என்றனர்.