வாணியம்பாடி அருகே, பெற்ற குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்ற பெண், தாயுடன் கைது - வாங்கிய பெங்களூரு தம்பதி-தரகரும் சிக்கினர்

வாணியம்பாடி அருகே பெற்ற குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்ற பெண் அவரது தாயாருடன் கைது செய்யப்பட்டார். குழந்தையை வாங்கிய பெங்களூரு தம்பதி மற்றும் தரகரும் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-09-25 22:45 GMT
வாணியம்பாடி,

வாணியம்பாடி அருகே உள்ள இந்திராநகரை சேர்ந்தவர் முருகன். இவர் சத்யா (வயது 26) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள் ரேணுகாதேவி (3), மகன் ஆதித்யா (1). சத்யா ஏற்கனவே இருவரை திருமணம் செய்து கொண்டு அவர்களை விட்டு பிரிந்து வந்து விட்டார். அதன்பின்தான் அவரை முருகன் திருமணம் செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக முருகன், காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் சத்யாவுடன் அவரது தாயார் கீதாவும் வசித்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்தபின் முருகன் வீடு திரும்பியபோது மகன் ஆதித்யாவை காணவில்லை. அது குறித்து கேட்டபோது குழந்தை காணாமல் போய்விட்டதாக சத்யாவும், கீதாவும் கூறினர். ஆனால் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

எனவே அது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சத்யாவிடம் விசாரணை நடத்தியபோது தானும் தாயார் கீதாவும் சேர்ந்து மகன் ஆதித்யாவை, பெங்களூரு ஜெய்நகரை சேர்ந்த ரகுமத்-ஷகிலா தம்பதியிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்க முடிவு செய்தோம் என்றும் முதல்கட்டமாக ரகுமத் ரூ.65 ஆயிரத்தை கொடுத்து குழந்தையை வாங்கிக்கொண்டு மீதம் உள்ள தொகையை பின்னர் தருவதாகவும் கூறி சென்றதாக தெரிவித்தனர். குழந்தையை விற்க கவிதா என்ற தரகர் உதவியதாகவும் அவர்கள் கூறினர்.

இது குறித்து வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி ஆகியோர் மேல் விசாரணை நடத்தி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாருக்கு தகவல் அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் பெங்களூரு ஜெய்நகருக்கு விரைந்தனர். அங்கு ஆதித்யாவை மீட்ட போலீசார் ரகுமத்-ஷகிலா தம்பதியை வாணியம்பாடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதற்கு உடந்தையாக இருந்த தரகர் கவிதாவையும் அவர்கள் பிடித்தனர்.

குழந்தையை வளர்க்க முடியவில்லையென்றால் அரசு தொட்டிலில் ஒப்படைக்கலாம். கணவருடன் சேர்ந்துதான் இதற்கு முடிவு எடுக்க முடியும். ஆனால் கணவருக்கு தெரியாமல் குழந்தையை விற்றதால் சத்யா மற்றும் அவரது தாயார் கீதா மற்றும் தரகர் கவிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து குழந்தையை வாங்கிய ரகுமத்-ஷகிலா தம்பதியிடம் விசாரித்தபோது “தங்களுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அப்போது தரகர் கவிதாவை தொடர்பு கொண்டதில் அவர் மூலம் இந்த குழந்தையை நாங்கள் ரூ.1 லட்சத்துக்கு வாங்கினோம்” என்றனர். இவ்வாறு குழந்தை இல்லா தம்பதியர் குழந்தைகளை அரசிடம் பதிவு செய்து தத்து நிறுவனங்களிடம் இருந்துதான் வாங்க முடியும். அவர்கள் குழந்தையை ஒழுங்காக வளர்க்கிறார்களா? என்பதை அதன் மூலம்தான் கண்காணிக்க முடியும். எனவே சட்டவிரோதமாக குழந்தையை வாங்கியதால் ரகுமத்-ஷகிலா தம்பதியையும் விசாரணைக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர்.

புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் போலீசார் துரித நடவடிக்கை எடுத்து குழந்தையை மீட்டதோடு தாய் உள்பட 5 பேரையும் அதிரடியாக கைது செய்ததை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

மேலும் செய்திகள்