தமிழகத்தில் தற்காலிக துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை - தேசிய ஆணைய உறுப்பினர் தகவல்

தமிழகத்தில் பணிபுரியும் 32 ஆயிரம் தற்காலிக துப்புரவு தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தர்மபுரியில் தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹெர்மானி கூறினார்.

Update: 2019-09-25 22:45 GMT
தர்மபுரி,

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹெர்மானி தர்மபுரியில் நேற்று நேரில் ஆய்வு நடத்தினார். தர்மபுரி டவுன் பஸ் நிலையம், புறநகர் பஸ்நிலையம் ஆகியவற்றில் உள்ள கழிவறைகளை பார்வையிட்டு, நகராட்சி துப்புரவு தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை நேரில் பார்வையிட்ட அவர் துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களிடமும் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் குறித்த ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் மலர்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹெர்மானி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்ட துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நீண்ட நாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார். நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஊதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பணபலன்களை சரியான நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களின் உரிமைகள், நலன்களை பாதுகாப்பதற்கான மத்திய அரசின் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் வகையில் அனைத்து துறைகளும் செயல்பட வேண்டும்.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அளவில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை அரசுத்துறை அலுவலர்கள் நிறைவேற்ற வேண்டும். தர்மபுரி நகராட்சிக்கு மாநில அளவில் சிறந்த நகராட்சிக்கான விருதை தமிழக முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார். இது துப்புரவு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்கு வழங்கப்பட்ட விருதாக பார்க்கப்படுகிறது. துப்புரவு தொழிலாளர்கள் அனைவரையும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உடனடியாக இணைக்க வேண்டும். அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் பணியாற்றும் சுமார் 32 ஆயிரம் தற்காலிக துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் சம்பத்குமார் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கோவிந்தன், மகளிர் திட்ட அலுவலர் ஆர்த்தி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சீனிவாசராஜூ, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜீஜாபாய், நகராட்சி கமி‌‌ஷனர் மகேஸ்வரி, பொறியாளர் கிரு‌‌ஷ்ணகுமார் மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்