திருவாரூர் மாவட்ட லாரிகளில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டதால் சாலையோரம் லாரிகளை நிறுத்தி தஞ்சை டிரைவர்கள் போராட்டம்

திருவாரூர் மாவட்ட லாரிகளில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டதால் சாலையோரம் லாரிகளை நிறுத்தி தஞ்சை டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-25 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் தற்போது கோடை நெல் அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தஞ்சை பிள்ளையார்பட்டி, இரும்புதலை, அம்மன்பேட்டை, புனல்குளத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இது தவிர நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பப்பட்டு அரிசி மூட்டைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மற்றும் லாரிகள் மூலம் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் வினியோகம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்படும்.

அதன்படி நேற்று பிள்ளையார்பட்டி, புனல்குளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சேமிப்புக்கிடங்குகளில் இருந்து புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையம் அருகே உள்ள எடை போடும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு எடை போடும் எந்திரம் பழுதானதால் எடை போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக எடை போடும் எந்திரம் சரி செய்யப்பட்டு, லாரிகளை எடை போட பணியாளர்கள் தயாரானார்கள்.

வாக்குவாதம்

இந்த நிலையில் திருவாரூரில் இருந்து வந்த 3 லாரிகளில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டதை அறிந்த தஞ்சை லாரி உரிமையாளர்களும், டிரைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும், அரிசி மூட்டைகளுடன் லாரிகளை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு எடைபோடும் மையத்திற்கு வந்தனர். அங்கு திருவாரூரில் இருந்து 3 லாரிகளை வரவழைத்தவர்களுக்கும், மற்ற டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை அறிந்த நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள், குட்செட் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் திருவாரூரை சேர்ந்த 3 லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சரக்கு ரெயிலில் ஏற்றுவதுடன், இனிமேல் அரிசி மூட்டைகளை ஏற்றக்கூடாது என உடன்பாடு ஏற்பட்டது.

நெல்லை-கன்னியாகுமரி

இதையடுத்து அரிசி மூட்டைகளுடன் நின்ற லாரிகள் எடை போடப்பட்டு ரெயில் நிலையத்திற்கு சென்றன. பின்னர் லாரிகளில் இருந்த அரிசி மூட்டைகள், சரக்கு ரெயிலில் ஏற்றப்பட்டன. மொத்தம் 42 வேகன்களில் 2,000 டன் புழுங்கல் அரிசி ஏற்றப்பட்டன. பின்னர் இந்த அரிசி மூட்டைகள் நெல்லைக்கும், கன்னியாகுமரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்