துபாயில் இருந்து விமானத்தில் மதுரைக்கு கடத்தி வந்த 23 துப்பாக்கிகள் பறிமுதல்; இளையான்குடியை சேர்ந்த 3 பேர் சிக்கினர்

துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் கடத்தி வந்த 23 துப்பாக்கிகளை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைப்பற்றினர். இதுதொடர்பாக சிக்கிய இளையான்குடியை சேர்ந்த 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2019-09-25 23:30 GMT
மதுரை,

துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக மதுரை சுங்கப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால் உஷாரான அதிகாரிகள், துபாயில் இருந்து வந்த விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை தீவிரமாக சோதனையிட்டனர். சுங்க புலனாய்வுத்துறை உதவி கமி‌ஷனர் டாக்டர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

அந்த விமானத்தில் வந்த சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த சிராஜம் முனீர்(வயது 33), இஜாஸ் அகமது (24), முகமது ஹையூம் (24) ஆகியோரது நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அவர்களை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். அதுபோல், அவர்களது உடைமைகளையும் தனி அறையில் வைத்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த பெரிய அட்டை பெட்டிகள் மற்றும் சூட்கேஸ்களை திறந்து பார்த்த போது அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

துப்பாக்கிகளை கழற்றி உபகரணங்களாக மாற்றி பெட்டிகளில் வைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த துப்பாக்கிகளின் உபகரணங்களை பொருத்தினர். மொத்தம் 23 துப்பாக்கிகள் இருந்தன. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பிடிபட்ட அந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், துப்பாக்கி சுடும் விளையாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய துப்பாக்கிகள் என தெரியவந்தது. உடனே நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த துப்பாக்கிகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து துபாயில் இருந்து கடத்தி வந்த 23 துப்பாக்கிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபு கூறும்போது, ‘‘பறிமுதல் செய்யப்பட்ட 23 துப்பாக்கிகளின் மதிப்பு சுமார் ரூ.18 லட்சம் ஆகும். துப்பாக்கிகள் அனைத்தையும், துப்பாக்கி சுடும் போட்டிக்காக கொண்டு வந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்களுக்காக திட்டமிட்டு கொண்டு வந்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

துபாயில் இருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்தது எப்படி? என்பது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:–

பறிமுதல் செய்யப்பட்ட 23 துப்பாக்கிகளையும் துபாயில்தான் வாங்கி உள்ளனர். அதன்பின்னர் அவற்றை மதுரைக்கு கடத்தி வர திட்டமிட்டுள்ளனர். உபகரணங்களை பொருத்தி துப்பாக்கிகளாக கொண்டு சென்றால் சிக்கிவிடுவோம் என்று கருதிய அவர்கள், அவற்றின் பாகங்களை கழற்றி பெட்டிகளில் அடைத்துள்ளனர். பின்னர் துபாய் விமான நிலைய ஊழியர்களை எப்படியோ ஏமாற்றிவிட்டு, விமானத்தில் கொண்டு வந்துள்ளனர். ஆனால், மதுரை விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டனர்.

இதுபோன்ற துப்பாக்கிகளை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர வேண்டும் என்றால் உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால், உரிய அனுமதி இருந்தாலும் பயணிகள் விமானத்தில் இதுபோன்ற பொருட்களை எடுத்துவர அனுமதி கிடையாது. அதற்கென இருக்கும் சரக்கு விமானத்தில்தான் கொண்டு வர முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்