கோவில்பட்டி, உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியை அடுத்த பிள்ளையார்நத்தம் கிராம மக்கள் நேற்று பகத்சிங் மன்ற மாவட்ட தலைவர் உத்தண்டராமன் தலைமையில், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் நிஷாந்தினியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் ஆண்டிகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரும் வகையில், தோணுகால் மலையில் இருந்து நீர்வரத்து ஓடை உள்ளது.
இந்த நிலையில் அந்த ஓடையையும், மலைக்குன்றையும் தனிநபர் ஆக்கிரமித்து உள்ளார். எனவே ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டோம். இதையடுத்து ஓடையை சர்வேயர்கள் அளவீடு செய்தபோது, அது தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதற்கிடையே ஓடையை ஆக்கிரமிப்பு செய்தவர், தோணுகால் மலையில் உள்ள சந்தனம் மற்றும் தேக்கு மரங்களை வெட்டி கடத்தி சென்று, தனது நிலத்தில் உள்ள கட்டிடத்தில் மறைத்து வைத்து இருந்தார்.
இதுகுறித்து வனத்துறையினரிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மர கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.