தலித் என்பதால் ஊருக்குள் நுழைய விடாத விவகாரம்: பா.ஜனதா எம்.பி.யை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்ற பொதுமக்கள்
தலித் என்பதால் பா.ஜனதா எம்.பி.யை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த பொதுமக்கள் தற்போது ஒரு வாரத்தில் மனம் மாறி மீண்டும் அந்த எம்.பி.யை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
பெங்களூரு,
சித்ரதுர்கா (தனி) நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.நாராயணசாமி. இவர் தனது தொகுதிக்குட்பட்ட துமகூரு மாவட்டம் பெம்மனஹள்ளி கிராமத்துக்கு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய கடந்த மாதம்(ஆகஸ்டு) 16-ந் தேதி சென்றார். அதன்பிறகு கொல்லா சமுதாய மக்கள் வசிக்கும் கொல்லரஹட்டி பகுதிக்கு அவர் செல்ல முயன்றார். அப்போது கொல்லரஹட்டி ஊருக்குள் நுழைய விடாமல் கொல்லா சமுதாயத்தினர் தடுத்தனர்.
மேலும், ‘நீங்கள் தலித் வகுப்பை சேர்ந்தவர். இதனால் நாங்கள் வசிக்கும் எங்கள் ஊருக்குள் நுழையக்கூடாது. நீங்கள் உள்ளே வருவது எங்களின் பாரம்பரிய மரபுக்கு எதிரானது. இதற்கு முன்பும் இதேபோல் வந்த மக்கள் பிரதிநிதிகளை நாங்கள் திருப்பி அனுப்பி உள்ளோம்‘ என்று கூறினர். இதனால் ஏ.நாராயணசாமி அங்கிருந்து திரும்பி சென்றார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும்படி கர்நாடக அரசு உத்தரவிட்டது. அத்துடன் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துமகூரு மாவட்ட கலெக்டர் கே.ராகேஷ்குமார் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக கொல்லா சமுதாயத்தை சேர்ந்த மடாதிபதிகள் கொல்லரஹட்டிக்கு சென்று அங்குள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எம்.பி.யை தடுத்து நிறுத்தியது தவறு என்று அவர்கள் எடுத்து கூறினர். மேலும் ஏ.நாராயணசாமி எம்.பி.யை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் அந்த நிகழ்ச்சி நடந்தது. ஒரு வாரத்தில் மனம் மாறிய கொல்லரஹட்டி பகுதி பொதுமக்கள், நேற்று முன்தினம் அங்கு வந்த ஏ.நாராயணசாமி எம்.பி.யை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அவருக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது பூக்களையும் அப்பகுதி மக்கள் தூவினர்.
இந்த வேளையில் ஏ.நாராயணசாமி கூறுகையில், ‘நான் பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. சேவையாற்ற வந்துள்ளேன். வளர்ச்சி பணிகளை செயல்படுத்த செல்லும்போது இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் அமைதியாக எதிர்கொள்வேன். நான் நினைத்தால் அன்றைய தினமே போலீசாரின் உதவியுடன் கொல்லரஹட்டிக்குள் நுழைந்து இருக்க முடியும். இருப்பினும் நான் பொறுமை காத்தேன். இதன்மூலம் ஒருவாரத்தில் மக்கள் மனம் மாறி உள்ளனர். பொதுமக்கள் ஒவ்வொருவரின் இதயத்தையும், மனதையும் வென்றதாக கருதுகிறேன். மனம்மாறிய அனைவருக்கும் நன்றி. இந்த மனமாற்றம் கொல்லரஹட்டியுடன் நிற்காமல் அனைத்து பகுதிகளுக்கும் பரவ வேண்டும்‘ என்றார்.
அதன்பிறகு உஜ்வாலா திட்டத்தின் கீழ் 19 பயனாளிகளுக்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்பட்டது. சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒசதுர்கா காகினாலே மடத்தின் மடாதிபதி மதரா சென்னயா உள்பட பல மடாதிபதிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.