மாவட்டம் முழுவதும் இடி- மின்னலுடன் பலத்த மழை, கோமுகி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் கோமுகி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது.

Update: 2019-09-24 23:00 GMT
விழுப்புரம்,

வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர்வதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான கோலியனூர், காணை, வளவனூர், பெரும்பாக்கம், தோகைப்பாடி, கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு 9 மணியில் இருந்து பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை ½ மணி நேரமாக கொட்டித்தீர்த்தது.

அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இரவு 12 மணி முதல் இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. அதன் பின்னரும் நேற்று அதிகாலை வரை விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. அதுபோல் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் அந்த தண்ணீரில் பஸ்கள் ஊர்ந்து சென்றன. உடனே மின்மோட்டார் மூலம் அந்த தண்ணீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானம், ரெயில்வே மைதானம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானங்களிலும் மழைநீர் தேங்கியது. ரெயில் நிலையம் அருகில் உள்ள பழைய சிந்தாமணி தெருவில் கோலியனூரான் வாய்க்கால் நிரம்பி சாக்கடை நீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றி தேங்கியதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர்.

இதேபோல் கல்வராயன்மலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணைக்கு கல்படை, பொட்டியம் ஆறுகள் வழியாக வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 44 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணையில் நேற்று முன்தினம் 20 அடிக்கு தண்ணீர் இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்து, அணையின் நீர்மட்டம் 30 அடியாக உள்ளது. மேலும் பெரியார், கவியம் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுகிறது.

இதற்கிடையே கல்வராயன்மலை பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்த போது, சடையம்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்த மின்மாற்றி நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் பழுதானது. இதனால் மாத்தூர், அக்கராயப்பாளையம், அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மின்வினியோகம் தடைபட்டது. இதுபற்றி அறிந்த மின்வாரிய ஊழியர்கள் பழுதான மின்மாற்றியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு வரை பழுதான மின்மாற்றி சரிசெய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.

சங்கராபுரம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் பிரமன். இவர் தனக்கு சொந்தமான பசு மாட்டை அதே பகுதியில் உள்ள விளை நிலத்தில் கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியில் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் பிரமனின் பசு மாடு செத்தது.

மூங்கில்துறைப்பட்டு அருகே வடகீரனூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தின் முன்பகுதியில் பழமை வாய்ந்த புளிய மரம் ஒன்று இருந்தது. நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையால் அந்த மரம் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று காலை 10 மணி அளவில் அந்த பகுதிக்கு வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

இதேபோல் திண்டிவனம், மயிலம், மரக்காணம், செஞ்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, மேல்மலையனூர், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், கள்ளக்குறிச்சி, வானூர், கோட்டக்குப்பம் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது.

இந்த மழையினால் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து வரத்தொடங்கியுள்ளது. அதுபோல் மாவட்டத்தில் உள்ள வீடூர், மணிமுக்தா ஆகிய அணைகளின் நீர்மட்டமும் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்