ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்கக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

சென்னையில், ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்கக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-24 22:30 GMT
சென்னை,

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள், தங்களது ஓய்வூதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும், மருத்துவப்படி ரூ.100-ஐ ரூ.300-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னை பல்லவன் இல்ல பணிமனையில் இருந்து, கோட்டையை நோக்கி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்லவன் இல்லத்தில் நேற்று குவிந்தனர். அங்கிருந்து கோட்டையை முற்றுகையிடுவதற்காக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.

போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல கூட்டமைப்பு சங்க பொதுச்செயலாளர் கர்சன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட நிலுவைத்தொகையை வழங்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எங்களின் தவிப்பை அரசு ஏற்க மறுக்கிறது. எனவே, ஓய்வூதியத்தை காலம் தாழ்த்தி வழங்காமல் மாதம் முதல் தேதியே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே போக்குவரத்து கழக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினார். அப்போது அவர், உங்களது கோரிகைகளுக்கு அரசு செவி சாய்த்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல கூட்டமைப்பு சங்கத்தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்