சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட முயன்ற 35 பெண்கள் உள்பட 120 பேர் கைது

குலதெய்வ சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட முயன்ற 35 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-23 23:30 GMT
சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. சங்ககிரி தாலுகா புள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள், தங்களுடைய குலதெய்வ சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்ற 35 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அவர்களை போலீசார் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்தனர்.

முன்னதாக இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் 50 குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஆண்டுதோறும் எங்கள் ஊரில் உள்ள குலதெய்வமான மாரியம்மன், முப்பூஜைகாளியம்மனுக்கு உள்ளூரிலும், வீரமாத்தியம்மனுக்கு ஊர் பொது கிணற்றிலும் திருவிழா நடத்துவது வழக்கம். இதற்காக அம்மனுக்கு படையலிட்டு வழி்பட உரிய அனுமதி பெற்று தரைத்தளம் அமைக்கப்பட்டது.

ஆனால் இந்த தரைத்தளத்தையும், வீரமாத்தியம்மன் சிலையையும் சிலர் அகற்றிவிட்டனர். மேலும் அங்குள்ள விநாயகர் கோவிலில் நாங்கள் உள்ளே நுழையாதவாறு முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அகற்றப்பட்ட குலதெய்வ சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், விநாயகர் கோவிலின் முள்வேலியை அகற்றவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்