சாலையை சீரமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

சாலையை சீரமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-23 22:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் அருகே வெங்கந்தூர் காலனியில் உள்ள மாதா கோவில் தெருவில் இருந்து பிள்ளையார் கோவில் தெரு வரையுள்ள சாலை குண்டும்- குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுநாள் வரையிலும் சாலை சீரமைக்கப்படவில்லை.

தற்போது கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையினால் இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் நடந்து செல்லகூட முடியாத நிலையில் படுமோசமாக உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், சதீஷ் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்