அரண்மனை வளாகத்தில் நடந்த ஒத்திகையின்போது தசரா யானை காவேரியின் காலில் ஆணி குத்தியது

அரண்மனை வளாகத்தில் நடந்த ஒத்திகையின்போது தசரா யானை காவேரியின் காலில் ஆணி குத்தியது. அந்த ஆணியை பாகன்கள் அகற்றினார்கள்.

Update: 2019-09-22 23:37 GMT
மைசூரு,

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 29-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் மைசூருவில் வேகமாக நடந்து வருகிறது. மைசூரு தசரா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் 8-ந்தேதி நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக பல்வேறு முகாம்களில் இருந்து 14 யானைகள் மைசூருவுக்கு வந்துள்ளன. அந்த யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அந்த யானைகளுக்கு தினமும் நடைபயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 14 யானைகள் மற்றும் அவைகளின் பாகன்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரண்மனை வளாகத்தில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மைசூருவில் கடந்த சில தினங்களாக ஜம்பு சவாரி ஊர்வலத்தின் ஒத்திகை நடந்து வருகிறது. அதாவது, 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா தலைமையில் அனைத்து யானைகளும் மணல் மூட்டைகளை சுமந்து கொண்டு மைசூரு நகரில் ஊர்வலமாக செல்லும். அதேபோல, நேற்றும் ஜம்பு சவாரி ஊர்வலம் ஒத்திகை நடைபெற்றது.

இதில் மரத்தால் ஆன அம்பாரியை அர்ஜூனா யானை சுமந்து செல்ல மற்ற யானைகள் மணல் மூட்டைகளை சுமந்து கொண்டு அதன் பின்னால் சென்றன. அப்போது, அரண்மனை வளாகத்தில் சென்றபோது தசரா யானை காவேரி நடக்க முடியாமல் நொண்டியபடி சென்றது. இதனை கவனித்த பாகன்கள், யானையின் பாதத்தை பார்த்தனர். அப்போது காவேரி யானையின் உள்ளங்காலில் ஆணி ஒன்று குத்தி இருந்தது. அரண்மனை வளாகத்தில் கிடந்த ஆணி ஒன்று யானையின் பாதத்தில் குத்தியதும், இதன்காரணமாக காவேரி யானை நடக்க முடியாமல் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து பாகன்கள், காவேரி யானையின் பாதத்தில் குத்தியிருந்த ஆணியை லாவகமாக அகற்றினர். அதன்பின்னர் யானை, ஒத்திகையில் பங்கேற்றது. காவேரி யானையின் காலில் ஆணி குத்தியதால் ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகை சிறிது நேரம் தடைப்பட்டது.

மேலும் செய்திகள்