இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் அரசியலில் இருக்க எம்.டி.பி.நாகராஜிக்கு தகுதி இல்லை - சித்தராமையா பேச்சு

அரசியலில் இருக்க எம்.டி.பி.நாகராஜிக்கு தகுதி இல்லை என்றும், இடைத்தேர்தலில் அவருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் சித்தராமையா கூறினார்.

Update: 2019-09-22 23:33 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த எம்.எல்.ஏ.க்கள் உள்பட கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் உத்தரவிட்டு இருந்தார். இதனால் மாநிலத்தில் 17 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் மூலம், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதன்படி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த எம்.டி.பி.நாகராஜின் தொகுதியான ஒசகோட்டையில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

ஒசகோட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 4 முறை எம்.டி.பி.நாகராஜ் போட்டியிட்டுள்ளார். அதில், 3 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி உள்ளார். அவருக்கு காங்கிரஸ் கட்சி எல்லா பதவிகளையும் கொடுத்துள்ளது. கூட்டணி ஆட்சியில் வீட்டுவசதி துறை மந்திரியாக இருந்தார். அப்படி இருந்தும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரிடம் ராஜினாமாவை திரும்ப பெறும்படி நான், டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் 12 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

எங்களிடம் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக கூறிவிட்டு மறுநாள் எம்.டி.பி.நாகராஜ் மும்பைக்கு சென்று விட்டார். சிக்பள்ளாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சுதாகரிடம் சத்தியம் செய்து கொடுத்திருப்பதாகவும், அதனால் ராஜினாமாவை திரும்ப பெற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். எம்.டி.பி.நாகராஜை வெற்றி பெற செய்தது சுதாகரா? அல்லது இந்த தொகுதி மக்களான நீங்களா?. காங்கிரஸ் கட்சிக்கும், ஒசகோட்டை தொகுதி மக்களுக்கும் எம்.டி.பி.நாகராஜ் துரோகம் செய்துள்ளார்.

எம்.டி.பி.நாகராஜ் தனது பெயரிலேயே விஷத்தை வைத்துள்ளார். தற்போது அவரது உடல் முழுவதும் விஷம் பரவி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவர் அரசியலில் இருக்க தகுதி இல்லை. ஒசகோட்டை தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். இந்த தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். எம்.டி.பி.நாகராஜ் இடைத்தேர்தலில் போட்டியிட்டாலும் சரி, அவரது குடும்பத்தினர் போட்டியிட்டாலும் சரி, அவர்களை தோற்கடித்தே தீர வேண்டும்.

ஒசகோட்டை தொகுதி மக்கள் இடைத்தேர்தலில் எம்.டி.பி.நாகராஜிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பண பலத்தால் வெற்றி பெற்று விடலாம் என்று எம்.டி.பி. நாகராஜ் நினைக்கிறார். அவரால் வெற்றி பெற முடியாது. ஒசகோட்டை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருக்கும். இவ்வாறு சித்தராமையா பேசினார்.

மேலும் செய்திகள்