எட்டயபுரம் அருகே, கிரஷர் எந்திரத்தில் இருந்து விழுந்து பலியான பெண்ணின் உடல் ஒப்படைப்பு

எட்டயபுரம் அருகே கிரஷர் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து பலியான பெண்ணின் உடல், பேச்சுவார்த்தைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2019-09-22 22:15 GMT
எட்டயபுரம், 

எட்டயபுரம் அருகே உள்ள குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகள் மிக்கேல் அம்மாள் (வயது 40). திருமணமான இவர் கணவரை விட்டு பிரிந்து, தன்னுடைய மகளுடன் பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார்.

மிக்கேல் அம்மாள், அப்பகுதியில் உள்ள பாறைப்பொடி தயாரிக்கும் (கிரஷர்) நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரஷர் எந்திரத்தில் நின்று வேலை செய்தபோது, தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மிக்கேல் அம்மாளின் குடும்பத்தினருக்கு தனியார் நிறுவனத்தினர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவருடைய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர். இதனையடுத்து நேற்று காலையில் எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, தாசில்தார் அழகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மிக்கேல் அம்மாளின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்