தேனி அருகே, பாதை வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டம் 7-வது நாளாக தொடர்கிறது
தேனி அருகே பாதை வசதி கேட்டு பொதுமக்கள் 7-வது நாளாக நேற்று தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
தேனி அருகே சுக்குவாடன்பட்டி இந்திரா காலனியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு பாதை வசதி கேட்டு கடந்த 16-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்கள் தனியாருக்கு சொந்தமான இடத்தை பாதையாக பயன்படுத்தி வந்தனர். அந்த இடத்தின் உரிமையாளர் கோர்ட்டு உத்தரவு பெற்று தனது இடத்தை சுற்றிச் சுவர் எழுப்பியுள்ளார். இதனால், பாதை வசதி கேட்டு பொதுமக்கள் 6 நாட்களாக ரத்தினம் நகரில் உள்ள ஒரு புளியந்தோப்பில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
7-வது நாளான நேற்று, அவர்கள் பாதையாக பயன்படுத்திய தனியார் நிலம் அருகில் சாலையோரம் அமர்ந்து தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், பஞ்சமி நில மீட்பு மாநில துணை செயலாளர் உலகநம்பி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்திய பாதையையே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி னர். அங்கு பாதுகாப்பு பணிக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.