கடல்வழி வாணிபத்தில் மேலோங்கியவர்கள் தமிழர்கள் - பிரான்ஸ் மானுடவியலாளர் தகவல்
கடல்வழி வாணிபத்தில் தமிழர்கள் மேலோங்கியவர்கள் என்று பிரான்ஸ் நாட்டின் மானுடவியலாளர் தெரிவித்துள்ளார்.
பழனி,
பிரான்ஸ் நாட்டின் மானுடவியலாளர் ரோமைன் சைமனஸ் என்பவர் பழனி முருகன் கோவில், போகர் சித்தர் மற்றும் தமிழ் பழங்குடிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் பழனிக்கு வருகை தந்தார். பின்னர் பழனி பகுதியை சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் நாராயணமூர்த்தியுடன் நெய்க்காரப்பட்டி அருகே உள்ள இரவிமங்கலம் பகுதிக்கு சென்று அங்கு பழங்கால மக்கள் வாழ்ந்ததாக கூறப்படும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இரவிமங்கலம் பகுதிக்கு சென்று பார்த்தபோது தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததற்கான சுவடுகள் உள்ளன. ஆப்பிரிக்க கருப்பின மக்களின் டி.என்.ஏ. தமிழக பழங்குடியினரான இருளர் இன மக்களின் டி.என்.ஏ.வோடு ஒத்துபோகிறது. அதேபோல் எகிப்து மக்களின் டி.என்.ஏ.வோடு தமிழகத்தில் வாழும் இதர பழங்குடியின மக்களின் டி.என்.ஏ. ஒத்துபோகிறது.
குறிப்பாக எகிப்தில் உள்ள மம்மி சிலைகள் செய்ய ஏலக்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த காலத்தில் தமிழகத்தில் மட்டுமே ஏலக்காய் சாகுபடி நடந்துள்ளது. எனவே தமிழர்கள் கடல்வழி வாணிபத்தில் மேலோங்கியவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் கடல் அலைகளின் கணிப்பு, வானிலை விவரம் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கடல் ஆதிக்கத்திலும் சிறப்பு பெற்று தமிழர்கள் விளங்கியுள்ளனர்.
இதுமட்டுமல்லாது எகிப்து பழங்குடிகளின் பழக்கவழக்கங்கள், தமிழர்களின் பழக்க வழக்கங்களோடு பெரும்பாலும் ஒத்து காணப்படுகிறது. குறிப்பாக எகிப்து பழங்குடியின ஆண்கள் தமிழக ஆண்கள் அணியும் வேட்டியை போன்றே கட்டி வருகின்றனர். பிற்காலத்தில் ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தால் தான் தமிழர்களின் கடல் ஆதிக்கம் குறைந்துள்ளது. மேலும் தமிழர் பண்பாடு தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் பரந்து விரிந்துள்ளது. எனவே இந்தியா முழுவதும் தமிழர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை முழுமையாக அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.