கொத்தமங்கலம் பகுதியில் 15 ஆயிரம் பனை விதை நடும் பணி தொடக்கம்

கொத்தமங்கலம் பகுதியில் 15 ஆயிரம் பனை விதை நடும்பணி தொடங்கியது.

Update: 2019-09-22 23:00 GMT
கீரமங்கலம்,

நிலத்தடி நீரை பாதுகாக்கவும், நீர்நிலைகளை பாதுகாக்கவும் பனை மரங்களை அதிகமாக வளர்க்க வேண்டும். பனை மரங்கள் படுகிறது என்றால் கடுமையான வறட்சி நிலவுகிறது என்று அர்த்தம் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற் படுத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த காலங்களில் செங்கல் சூளைகளுக்காக பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுவிட்டது. அதனால் தான் நிலத்தடி நீர் குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் பனை மரங்களை வளர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பனை விதைகளை நடவு செய்ய நிதி ஒதுக்கியுள்ளது. ஆனாலும் பனை விதைகளை விதைக்க இளைஞர்கள் ஆர்வமாக செயல்படத் தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் தொடர்ந்து பனை விதைகளை சேகரித்து வருகின்றனர்.

15 ஆயிரம் விதைகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கமல், வடகாடு, மாங்காடு, குளமங்கலம், மறமடக்கி உள்ளிட்ட பல கிராமங்களிலும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பனை விதைகளை சேகரித்து ஏரி, குளம் கரைகளில் நட்டு வருகின்றனர். மேலும் புதிதாக இளைஞர்களால் குடி மராமத்து செய்யப்பட்டுள்ள குளங்களின் கரைகளில் பனை விதைகளையும், மற்ற பல வகை மரக்கன்றுகளையும் நட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான் கொத்தமங்கலத்தில் பனைமரக்காதலர்கள் மற்றும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வடகாட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் நீர்நிலை சீரமைப்புக்குழுவினர் களமிறங்கி கொத்தமங்கலம், வடகாடு, மறமடக்கி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 15 ஆயிரம் பனை விதைகளை விதைக்க விதைகளை சேகரித்து நேற்று காலை முதல் நீர்நிலைகளின் கரைகள் மற்றும் பொது இடங்களில் பனை விதைகள் நடும் பணியை தொடங்கினார்கள்.

இதுகுறித்து இளைஞர்கள் கூறுகையில், பனை விதைப்பின் தொடக்கமாக முதல் நாளில் சுமார் 15 ஆயிரம் பனை விதைகளை நடஇருக்கிறோம். அடுத்து ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் பனை விதைகளை சேகரித்து நட இருக்கிறோம். இன்னும் ஒரு மாதத்திற்குள் கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, மறமடக்கி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் சுமார் 5 லட்சம் பனை விதைகளை நடுவோம். விடுமுறை நாட்களை வருங்கால சந்ததிக்காக பயனுள்ளதாக பயன்படுத்துவோம் என்றனர்.

மேலும் செய்திகள்