கன்சால்பேட்டையில், கழிவுநீர் கால்வாய் அடைப்பால் தெருவில் தேங்கி நிற்கும் மழைநீர்
கன்சால்பேட்டையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் தெரு, வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் நள்ளிரவில் மழை பெய்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வேலூர், வாணியம்பாடி, ஆலங்காயம், காட்பாடி, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணிநேரம் மழை கொட்டி தீர்த்தது. பின்னர் சாரல் மழை பெய்தது. அதனால் இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. மழையின் காரணமாக தாழ்வான பகுதிகள், சாலை யோரங்களில் மழைநீர் தேங்கியது.
காட்பாடி ரெயில்நிலைய பகுதியில் அதிகபட்சமாக 15 மில்லி மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 8 மணி வரை மாவட்டம் முழுவதும் பதிவான மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- ஆலங்காயம்- 14.2, நாட்டறம்பள்ளி- 12.4, வேலூர்- 10.4, வாணியம்பாடி- 10, குடியாத்தம்- 5.4.
சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வேலூர் காந்திநகர் கன்சால்பேட்டை பகுதியில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாத காரணத்தால் லேசாக மழை பெய்தாலே மழைநீருடன், கழிவுநீர் கலந்து தெருவில் தேங்கும் நிலை உள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது. சில வீடுகளின் உள்ளேயும் தண்ணீர் புகுந்து விடுகிறது. அதனால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
கழிவுநீரோடு, மழைநீர் தேங்கி நிற்பதால் டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகவும், சுகாதாரக்கேடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தெருவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தரைப்பகுதி எது?, கழிவுநீர் கால்வாய் எது என்று தெரியாத நிலை காணப்படுகிறது. கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
தெரு, வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்களுக்கு சுகாதாரகேடு வரும் முன்பு கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்ய மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.