வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் பாதிப்பு: நீலகிரியின் பாரம்பரியமிக்க தைல தொழிலை பாதுகாக்க வேண்டும் - தொழிலாளர்கள் கோரிக்கை
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நீலகிரியின் பாரம்பரியமிக்க தைல தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தைல தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகிறது.
ஊட்டி,
நீலகிரி தைலம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பிரசித்தி பெற்றதாக உள்ளது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வர்க்கி, ஹோம்மேட் சாக்லெட், நீலகிரி தைலம் ஆகியவற்றை விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும் தைலம் காய்ச்சும் தொழில் மற்றும் வியாபாரம் மூலம் சுமார் 30 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். நீலகிரி தைலம் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகள் சார்பில் வலி நிவாரண மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் நேரடியாக மற்றும் மறைமுகமாக ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை 1 மாதத்துக்கு மட்டும் 20 டன் தைலம் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்பட்டது. 1 லிட்டர் தைலம் ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சீனா, தென்ஆப்ரிக்கா உள்பட நாடுகளில் இருந்து தைலம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் நீலகிரி தைலம் காய்ச்சும் தொழில், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது 1 மாதத்துக்கு 10 ஆயிரம் லிட்டர் மட்டுமே தைலம் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. இப்போது 1 லிட்டருக்கு ஆயிரம் மட்டுமே விலை கிடைத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தைலத்தை விட நீலகிரி தைலம் தரமாக இருந்தது. இதனால் நீலகிரி தைலத்துடன் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் தைலத்தை கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கற்பூர மரம் வளர்த்து வரும் விவசாயிகள் மற்றும் தைல தொழில் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் நாளுக்கு நாள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.
போதிய வருமானம் இல்லாததாலும், தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையாலும் பெரும்பாலானவர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது 10 ஆயிரம் பேர் மட்டுமே தைலம் காய்ச்சும் தொழில் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போதிய வருமானம் இன்றியும் அவதிப்பட்டு வருகின்றனர். இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் நீலகிரி தைலத்துக்கு மவுசு இல்லாமல் போய் விடும் சூழல் உருவாகி உள்ளதாக தைல உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் கவலையுடன் கூறினர்.
இது குறித்து தைல உற்பத்தியாளர்கள் அமைப்பை சேர்ந்த பூராகவன், தொழி லாளர்கள் கூறியதாவது:-
நீலகிரி தைலத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதற்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து தைலம் இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும். இல்லை எனில் இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் நீலகிரியில் தைல தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான வர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். மேலும் பாரம்பரியமிக்க நீலகிரி தைலத்தை பாதுகாக்க முடியும். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.