குந்தா கூட்டுறவு தொழிற்சாலைக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரிப்பு - போதிய தொழிலாளர்கள் இல்லாததால் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
மஞ்சூர் பகுதியில் குந்தா கூட்டுறவு தொழிற்சாலைக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் போதிய தொழிலாளர்கள் இல்லாததால் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக பச்சை தேயிலை விளங்கி வருகிறது. இதனை நம்பி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்யும் வடகிழக்கு பருவ மழை பொய்த்துவிட்ட காரணத்தால் பச்சை தேயிலை மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் தேயிலை விலையும் கடுமையாக சரிந்தது. இதனால் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து இந்த ஆண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் பெய்த பலத்த மழையால் தேயிலை தோட்டங்களில் பசுமை திரும்பியது. தேயிலை தோட்டங்களில் மகசூல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து மஞ்சூர் அருகில் உள்ள குந்தா (எடக்காடு) கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு கடந்த மாதம் வரை சராசரியாக ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கிலோ பச்சை தேயிலை வந்து கொண்டிருந்தது.
மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு தற்போது 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் கிலோ வரை பச்சை தேயிலை வருகிறது. இதன் காரணமாக தொழிற்சாலையில் பச்சை தேயிலை மலைபோல் குவிந்து கிடக்கிறது.
மேலும் கூட்டுறவு தொழிற்சாலையில் போதிய தொழிலாளர் இல்லாததால் பச்சை தேயிலையை உற்பத்தி செய்ய முடியாமல் நிர்வாகத்தினர் கடும் அவதியடைந்து உள்ளனர். மேலும் தேயிலை உற்பத்தி செய்ய எரிபொருள் தேவைக்கான விறகு தட்டுப்பாடு நிலவி வருவதால் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வரும் நாட்களில் மேலும் தேயிலை வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தேயிலை உற்பத்தி செய்ய தேவையான தொழிலாளர்கள் நியமிப்பதுடன் எரிபொருள் தேவைக்கான விறகுகளை உடனடியாக சேமித்து வைக்க வேண்டும் என விவசாய அங்கத்தினர்கள் நிர்வாக தரப்பிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாக குழு தலைவர் சிவராமன் கூறியதாவது:-
தொடர்ந்து பெய்த பலத்த மழையால் தற்சமயம் ஓரளவு மகசூல் அதிகரித்து தற்போது ஒரு நாளைக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் கிலோ வரை பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. போதிய தொழிலாளர்கள் இல்லாததால் உற்பத்தி குறைந்துள்ளது. வரும் காலங்களில் பச்சை தேயிலை மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் தேயிலை உற்பத்தி செய்ய தேவையான தொழிலாளர்கள் உடனடியாக நியமிக்கப் படுவர்.
மேலும் விறகு தட்டுப்பாட்டால் உடனடியாக விறகு சேமிக்கப்பட்டு தேயிலை உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற் படாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.