மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் வகையில் 30 இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அரவை எந்திரம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்
திண்டுக்கல் மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற் சிக்கு பயன்படுத்தும் வகையில், 30 இடங்களில் பிளாஸ்டிக் அரவை எந்திரங்கள் வைக்கும் பணியை, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்,
ஒருமுறை மட்டுமே பயன் படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தனியாக சேகரிக்கப்படுகிறது.
மேலும் அவற்றை மறுசுழற்சி செய்வதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற் காக பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கு வசதியாக, அரவை செய்யும் எந்திரங்களை வைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு தனியார் அமைப்புடன், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து செயல்படுகிறது.
அதன்படி திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையம், கடைவீதி உள்பட நகரில் 30 இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அரவை எந்திரம் வைக்கப்படுகிறது. இதில் ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட் களை பொதுமக்கள் போட்டால் போதும். எந்திரம் அரைத்து விடும். பின்னர் அவற்றை எடுத்து மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் பொருட் கள் தயாரிக்க பயன் படுத்தலாம்.
இந்த திட்டத்தின் தொடக்க விழா, திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கமிஷனர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மறுசுழற்சிக்கான பிளாஸ்டிக் பொருட்கள் அரவை எந்திரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் காலி பாட்டிலை, எந்திரத்துக்குள் போட்டு சோதனை செய்தார். இதையடுத்து மீதமுள்ள 29 இடங்களிலும் எந்திரம் வைக்கப்பட உள்ளது.
பின்னர் திண்டுக்கல் மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு, 29 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தலா 8 கிராம் தங்கம் ஆகியவற்றை வழங்கினார்.
இதில் மொத்தம் ரூ.10½ லட்சம் உதவித்தொகை மற்றும் 232 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தேன்மொழி, பரமசிவம், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாநகராட்சி என்ஜினீயர் பாலசந்திரன், நகர்நல அலுவலர் அனிதா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.