தஞ்சையில் 22 ஏக்கரில் குவிந்துள்ள 2 லட்சம் டன் குப்பைகள் விரைவில் அகற்றப்படும் மாநகராட்சி ஆணையர் தகவல்

தஞ்சையில் 22 ஏக்கரில் குவித்து வைக்கப்பட்டுள்ள 2 லட்சம் டன் குப்பைகள் விரைவில் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கூறினார்.

Update: 2019-09-21 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி தஞ்சையில் நடந்தது. இதில் யோகா பயிற்சி, குப்பைகளை தரம் பிரிப்பது எப்படி, குப்பைகளை பணமாக்குவது, பாதாளசாக்கடை, நச்சு தொட்டிகளில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதன் நிறைவு விழாவில் மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் வரவேற்றார். இதில் மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் கலந்து கொண்டு பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நகரம் தூய்மையாக காணப்படுவதில் துப்புரவு பணியாளர்களின் பங்கு இன்றியமையாதது. நீங்கள் மக்களிடம் அணுகி மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து வாங்க வேண்டும். முன்பு மாநகராட்சி குப்பைக்கிடங்குகளில் உள்ள உரங்களை விவசாயிகள் காசு கொடுத்து வாங்கி சென்றனர். ஆனால் தற்போது பிளாஸ்டிக், கண்ணாடி போன்றவை குப்பைக்கிடங்கில் சேருவதால், அதனை நிலத்தில் போட்டால் மண் வளம் கெட்டுவிடும் என யாரும் வாங்குவதில்லை.

2 லட்சம் டன் குப்பைகள்

தஞ்சை மாநகராட்சி குப்பைக்கிடங்கு 22 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அதில் 2 லட்சம் டன் குப்பைகள் குவிந்து உள்ளன. அவற்றை பிரித்து விரைவில் அகற்றப்படும். நீங்கள் சேகரிக்கும் ஒவ்வொரு குப்பையும் காசு தான். எனவே நீங்கள் இதில் பெற்ற பயிற்சியைக்கொண்டு அதனை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். எந்த பணிகளில் ஈடுபட்டாலும் உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் யோகா பயிற்சியாளர் ராஜசேகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி டெய்சிராணி, உதவி பொறியாளர் மாதவன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் சுகாதார ஆய்வாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்