எட்டயபுரம் அருகே கன்டெய்னர் லாரி மீது மினி லாரி மோதல்; மீன் வியாபாரி பலி

எட்டயபுரம் அருகே கன்டெய்னர் லாரி மீது மினி லாரி மோதியதில் மீன் வியாபாரி பலியானார். அவருடைய மகன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-09-21 21:30 GMT
எட்டயபுரம், 

ஈரோடு புதுமை காலனியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50). மீன் வியாபாரியான இவர் நேற்று முன்தினம் தனது மினி லாரியில் தூத்துக்குடிக்கு சென்று மீன்களை மொத்தமாக வாங்கினார். பின்னர் அவற்றை மினி லாரியில் ஏற்றிக் கொண்டு, நேற்று அதிகாலையில் ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றார். அந்த மினிலாரியை ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ் (37) ஓட்டிச் சென்றார்.

மினி லாரியில் முருகன் மகன் பாலகணேஷ் (21), தொழிலாளர்களான ராஜன் (50), ராஜா மகன் கார்த்திக் (17), சாந்தி (55) ஆகியோரும் சென்றனர். அதிகாலை 4.30 மணி அளவில் எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் நாற்கரசாலை பாலம் அருகில் சென்றபோது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மினி லாரி மோதியது. இதனால் நிலைதடுமாறிய மினி லாரி சாலையோர தடுப்பு கம்பியில் மோதியது.

இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த முருகன் மற்றும் பாலகணேஷ், ராஜன், கார்த்திக் ஆகிய 4 பேரையும் சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற 3 பேரையும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தில் டிரைவர் சதீஷ், சாந்தி ஆகிய 2 பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில், எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்