எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் எதிரொலி கர்நாடகத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி வாக்குப்பதிவு; வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது
கர்நாடகத்தில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கப்பட்டதால் காலியான 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(அக்டோபர்) 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை(திங்கட்கிழமை) தொடங்குகிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு(2018) நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்
இதையடுத்து, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் இருந்தனர். இந்த நிலையில், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. தற்போது எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு முன்பாக ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக 2 பேர் என மொத்தம் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தும், அவர்கள் வருகிற 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட தடை விதித்தும் சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதனால் கர்நாடகத்தில் 17 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
சபாநாயகரின் தீர்ப்பை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை 17 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தனர். இந்த நிலையில், மராட்டியம் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு நடைபெறும் சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடகத்தில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதன்படி, கர்நாடகத்தில் காலியாக உள்ள பெங்களூரு யஷ்வந்தபுரம் தொகுதி, கே.ஆர்.புரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜிநகர், பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசகோட்டை, சிக்பள்ளாப்பூர், மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை, மைசூரு மாவட்டம் உன்சூர், பெலகாவி மாவட்டம் அதானி, கோகாக், காகவாட், பல்லாரி மாவட்டம் விஜயநகர், உத்தரகன்னடா மாவட்டம் எல்லாப்பூர், ஹாவேரி மாவட்டம் ராணி பென்னூர், கிரேகெரூர் ஆகிய 15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
21-ந் தேதி ஓட்டுப்பதிவு
அதன்படி, 15 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அரசாணை நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. அன்றைய தினமே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 30-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை அடுத்த மாதம்(அக்டோபர்) 1-ந் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு அக்டோபர் 3-ந் தேதி கடைசி நாளாகும். அதைத்தொடர்ந்து, 15 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு அக்டோபர் 21-ந் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 24-ந் தேதி நடக்கிறது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், 15 தொகுதிகளிலும் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. கர்நாடகத்தில் காலியாக உள்ள பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர், ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி
மாநிலத்தில் 15 தொகுதிகளுக்கு திடீரென்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இதனை எதிர்பார்க்காத தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சபாநாயகரின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.
அன்றைய தினம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மனு தாக்கல் செய்யலாம் என்றும், இல்லையெனில் இடைத்தேர்தலில் போட்டியிட தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
போட்டியிட முடியாது
ஆனால் சபாநாயகரின் உத்தரவுப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 15 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது என்று கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் நேற்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்களது வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.