ஹெல்மெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று முழு மதுவிலக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஹெல்மெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று முழு மதுவிலக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2019-09-20 22:15 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். இதில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

தானிப்பாடி பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரும்பு நிலுவைத் தொகையை பெற்று தர வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகளை அரசே எடுத்து நடத்த வேண்டும். விவசாயிகளிடம் இருந்து மின் எடை மேடைகள் மூலம் பால் வாங்க வேண்டும்.

பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி, குளங்களில் மழைநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படவில்லை. கால்வாய்கள் தூர்வார வேண்டும்.

தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது மீண்டும் பழையபடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் நடைபெற வேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் சாலையோரம் தற்போது முட்புதர்கள் வளர்ந்து வருகின்றன. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கேட்கும் விதை நெல் வகைகள் கிடைப்பதில்லை.

ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தில் விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வருகிறோம்.

ஹெல்மெட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று தமிழகத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம சபை கூட்டங்களை முறையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும். குடிமராமத்து பணிகள் சரியாக நடைபெறுவது இல்லை. கலெக்டர் நேரில் சென்று பார்வையிட வேண்டும்.

மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

கூட்டத்தில் சிலர் தங்கள் கொடுத்த மனுக்களுக்கு அதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினர்.

அதற்கு பதில் அளித்த கலெக்டர் கூறுகையில், நீங்கள் கொடுக்கும் மனுக்கள் குறித்து விசாரணை செய்யப்பட்டு அதில் உண்மை இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும். சில மனுக்கள் நம்பகத்தன்மை இல்லாமல் இருந்தால் அவை நிராகரிக்கப்பட்டு இருக்கும். புகார் மனுவுடன் தங்களின் கருத்துகளை தெரிவியுங்கள் என்றார். மேலும் இதுபோன்ற தங்களின் தனிப் பிரச்சினைகளை கூறாமல் பொது பிரச்சினைகளை கூற வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்