வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பை வழங்கியது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரம் அருகே உள்ள கட்ராங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் அரவிந்தன் என்கிற மகேந்திரன்(வயது 23). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி ஒரு வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே புகுந்து, அங்கு தனியாக இருந்த 13 வயதுடைய 7-ம் வகுப்பு படித்த பள்ளி மாணவியை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து நடந்த சம்பவத்தை யாரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாக அந்த மாணவியை மகேந்திரன் மிரட்டினாராம். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி அழுதவாறு தனக்கு நடந்த சம்பவத்தை வீட்டிற்கு வந்த தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளாள். இதையடுத்து அவரது பெற்றோர் இது தொடர்பாக அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மகேந்திரன் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பாக வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று இந்த வழக்கை விசாரித்த மகிளா கோர்ட்டு நீதிபதி மலர்விழி தீர்ப்பு அளித்தார்.இதில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தற்கு போக்சோ சட்டத்தின் கீழ் மகேந்திரனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அத்துமீறி வீட்டிற்குள் புகுந்ததற்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மலர்விழி அதிரடி தீர்ப்பை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு வழங்கும் இழப்பீடு தொகையை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விரைந்து பெற்று கொடுக்குமாறு கூறினார். இந்த சிறை தண்டனை அனைத்தையும் மகேந்திரன் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென நீதிபதி மலர்விழி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இந்த வழக்கில் மகிளா கோர்ட்டு அரசு தரப்பு வக்கீல் வினோத்குமார் ஆஜராகி வாதாடினார்.