கோடாலிகருப்பூர் அருகே, இறந்த மூதாட்டியின் உடலை தண்ணீரில் தத்தளித்தவாறு எடுத்து செல்லும் அவலம்
கோடாலிகருப்பூர் அருகே இறந்த மூதாட்டியின் உடலை தண்ணீரில் தத்தளித்தவாறு எடுத்து செல்லும் அவலம் நிகழ்ந்துள்ளது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடாலிகருப்பூர் அருகே வக்காரமாரி கிராமத்திலுள்ள காலனி தெருவில் மயானத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அப்பகுதியில் உள்ள புதிய, பழைய வாய்க்கால் என 2 வாய்க்கால்களை கடந்து செல்ல வேண்டும். தண்ணீர் இல்லாத காலங்களில் அவர்களுக்கு சிரமம் தெரியாது. தற்போது மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், தா.பழூர் பகுதி பாசனத்திற்கு பொன்னாற்று வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிரம்பி சென்று கொண்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் இந்த வாய்க்கால்களில் தண்ணீர் வரும்போது, கிராமத்தில் இறந்தவர்களின் உடலை தண்ணீரில் தத்தளித்தவாறு கடந்துசென்று அடக்கம் செய்யும் அவலநிலை இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நிலையில் வக்காரமாரி காலனியை சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி மாரியம்மாள்(வயது 70) உடல்நிலை சரியில்லாமல் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
அவரது உடலை மயானத்திற்கு அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் தத்தளித்தவாறு எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வக்காரமாரி பகுதியில் உள்ள 2 வாய்க்கால்களிலும் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.