கே.வி.குப்பம் அருகே, அக்காள்-தங்கை டெங்கு காய்ச்சலால் பாதிப்பு - கிராமத்தில் முகாமிட்டு சுகாதார பணிகள் தீவிரம்

கே.வி.குப்பம் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்த அக்காள்-தங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கிராமத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

Update: 2019-09-20 22:15 GMT
குடியாத்தம், 

கே.வி.குப்பம் அருகே கொசவன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் நித்யானந்தம். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மகள்கள் தர்ஷினி (வயது 11), மைத்ரேயி (7) ஆகியோர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தர்ஷினி மற்றும் மைத்ரேயி ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது 2 பேருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் தேவபார்த்தசாரதி உத்தரவின்பேரில் வடுகந்தாங்கல் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட டாக்டர்கள் திவ்யா, முத்துசெல்வன், சுகாதார மேற்பார்வையாளர் ரவிக்குமார் மற்றும் சுகாதார பணியாளர்கள் கொசவன்புதூர் கிராமத்தில் முகாமிட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை நடத்தி வருகின்றனர்.

மேலும் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, ஹேமாவதி, ஊராட்சி செயலாளர் ஞானசேகர் உள்ளிட்டோர் மருத்துவ குழுவினருடன் இணைந்து வீடு, வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல இடங்களில் தண்ணீர் தேக்கி வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளில் கொசு உற்பத்திக்கான புழுக்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டு தீவிர சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்