கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியை அடுத்த மாதவபுரம் பகுதியில் நேற்று முன்தினம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. தகவல் அறிந்த ஒற்றையால்விளை, மாதவபுரம், சுவாமிநாதபுரம், கலைஞர் குடியிருப்பு உள்ளிட்ட 5 ஊர்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.
அவர்கள் புதிய கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் நேற்று முன்தினம் சாலைமறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து டாஸ்மாக் கடையையும் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் இரவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், நேற்று 2-வது நாளாக டாஸ்மாக் கடை முன்பு ஏராளமான பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தம்பிதங்கம், முத்துசாமி, அரிகிருஷ்ண பெருமாள், சிவசேனா நகர தலைவர் சுபாஷ், மாதவபுரம் ஊர் செயலாளர் கிருஷ்ணசாமி, மணிராஜா, சுந்தர் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மாலையில் ஆஸ்டின் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஸ்டீபன் உள்ளிட்ட தி.மு.க.வினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், டாஸ்மாக் கிட்டங்கி மேலாளர் சேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த டாஸ்மாக் கடை திறக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மாலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.