தூத்துக்குடி அருகே எரிவாயு குழாய் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் முற்றுகை
தூத்துக்குடி அருகே எரிவாயு குழாய் பதிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, குழாய்கள் ஏற்றி வந்த லாரியை முற்றுகையிட்டு திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்பிக்நகர்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மூலம் விளை நிலங்களில் எரிவாயு பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு குலையன்கரிசல், பொட்டல்காடு உள்ளிட்ட பகுதி விவசாயிகள் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த சமாதான கூட்டத்தின் போது விவசாய இடங்களில் குழாய்கள் பதிக்காமல் மாற்று இடத்தில் பதிக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் பொட்டல்காடு விவசாய இடங்களில் குழாய்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் பலர் அங்கு திரண்டனர். அப்போது குழாய்கள் பதிப்பதற்காக ஒரு லாரியில் குழாய்கள் கொண்டு வரப்பட்டது. அந்த லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு குழாய்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மேலாளர் ரமேஷ்பாபு பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால் அந்த பகுதி கிராம மக்கள், லாரியில் இருந்து குழாய்களை இறக்க விடாமல் அந்த லாரியை திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது அங்கு போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.