தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை அறிக்கை; மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை அறிக்கையை மதுரை ஐகோர்ட்டில் நேற்று சி.பி.ஐ. தாக்கல் செய்தது.

Update: 2019-09-20 23:30 GMT
மதுரை,

சி.பி.ஐ. இயக்குனர் சார்பில் சிறப்பு குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு ரவி, மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியும், இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் 4 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 222 வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்பேரில் அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 300 பேரிடம் விசாரிக்கப்பட்டு, 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச்சூடு ஏன் நடத்தப்பட்டது, அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டப்பட்டதா, ஆயுதங்கள் வைத்திருந்தார்களா? உள்பட பல காரணங்கள் பற்றி விசாரிக்கப்பட வேண்டும்.

எனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான காலத்தை நீட்டித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, துப்பாக்கிச்சூடு வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, துப்பாக்கிச்சூடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தொடர்பான அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து, கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்