நடிகர் அமிதாப்பச்சன் வீட்டு முன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ஜூகுவில் பரபரப்பு
ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க நடிகர் அமிதாப்பச்சன் ஆதரவு தெரிவித்ததை கண்டித்து மும்பை ஜூகுவில் உள்ள அவரது வீட்டு முன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை,
மும்பையில் செயல்படுத்தப்படும் 3-வது மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் ஆரேகாலனியில் பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு 2,700 மரங்கள் வெட்டப்பட உள்ளன. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சினிமா நட்சத்திரங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைவதற்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.
இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் சிலர் மும்பை ஜூகுவில் உள்ள அவரது ஜல்சா பங்களா வீட்டு முன்னால் போராட்டம் நடத்தினார்கள்.
மாணவர்கள் போராட்டம்
இந்த நிலையில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் கல்லூரி மாணவ, மாணவியர் நடிகர் அமிதாப்பச்சன் வீட்டு முன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க ஆதரவு தெரிவித்ததற்காக அவருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
அமிதாப்பச்சன் வீட்டு முன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மாணவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.அவர்களில் 22 பேரை போலீசார் பிடித்து சென்று விசாரணைக்கு பிறகு விடுத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.