வணிகத்தில் வெளிநாட்டினரின் ஆதிக்கத்தை விரட்ட விழிப்புணர்வு பிரசாரம் - த.வெள்ளையன் தகவல்
வணிகத்தில் வெளிநாட்டினரின் ஆதிக்கத்தை விரட்ட விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.
உடன்குடி,
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்க கட்டிடத்தில், வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
ஆங்கிலேயர்கள் வியாபாரம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து நம்மை அடிமைப்படுத்தினார்கள். அவர்களை அகிம்சை வழியில் போராடி விரட்டிய மகாத்மா காந்தி நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்தார். அதேபோன்று தற்போதும் வெளிநாட்டு வியாபாரிகளுக்கு உதவும் தலைவர்களே நம்மை ஆட்சி செய்கின்றனர்.
நமது வணிகத்தில் வெளிநாட்டினரின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. அவர்களை நாம் அகிம்சை வழியில் விரட்டுவதற்கு போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது.
நாம் இந்தியராக இருப்போம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையே வாங்குவோம். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்.
வணிகத்தில் வெளிநாட்டினரின் ஆதிக்கத்தை விரட்டுவோம் என்று வலியுறுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வருகிற 2-ந்தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்படும்.
மகாத்மா காந்தியின் 151-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் 151 பேர் எனது (த.வெள்ளையன்) தலைமையில், விழிப்புணர்வு பிரசாரம் செய்து கைதாக தயாராக உள்ளனர்.
இதுபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டம் நடத்துவதற்கு பேரவை நிர்வாகிகள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பேரவை மாவட்ட தலைவர்கள் ரவி (தெற்கு), விநாயகமூர்த்தி (வடக்கு), மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.