உயர்மின் கோபுர திட்டத்தை தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும் - சுப்புலட்சுமி ஜெகதீசன் பேட்டி
உயர் மின் கோபுர திட்டத்தை தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும் என்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறினார்.
கோவை,
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க அளவீடு பணி செய்ய வந்த அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடந்தது. இது தொடர்பாக விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அதன்பின்னர் சுப்புலட்சுமி ஜெகதீசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உயர் மின் அழுத்த கோபுரங்களை விவசாயிகளின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு அமைக்க கூடாது. ஏற்கனவே அமைக்கப்பட்ட உயர் மின் வழித்தடங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாத நிலையில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் உயர்மின் கோபுரங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. மின்சாரத்தை புதைவழித்தடமாக கொண்டு செல்ல வேண்டும்.
உயர் மின் கோபுரம் திட்டம், கெயில் திட்டம் போன்றவை விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த திட்டங்களுக்கு எதிராக தி.மு.க. தொடர்ந்து குரல் எழுப்பும். 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்கு நடக்காது என்று தமிழக கல்வி அமைச்சர் சொல்வது சந்தேகமாக உள்ளது. இதை மத்திய அரசு சொன்னால் நம்பலாம். ஆனால் மாநில அரசு இதில் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கும் என்பது தெரியவில்லை. இந்தியை கொண்டு வந்து உட்கார வைத்து விட்டால் எதிர்ப்பு இருக்கும். ஓட்டு கேட்டு செல்ல முடியாது என்பதால் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள பா.ஜனதா கட்சி முதல்-மந்திரி எடியூரப்பா இந்தியை எதிர்க்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, மெட்டல் மணி, நந்தக்குமார் உள்பட பலர் உடன் இருந் தனர்.