திண்டுக்கல்லில், முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் கொள்ளை

திண்டுக்கல்லில் முன்னாள் துணைவேந்தர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2019-09-19 22:15 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் எம்.வி.எம். 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 68). இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது இவர் வடமதுரையில் கல்லூரி நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.

தினமும் கல்லூரிக்கு கன்னியப்பனும், அவரது மனைவியும் சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்கள் கல்லூரியிலேயே தங்கி விட்டனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

நேற்று காலை கன்னியப்பன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் கள் கன்னியப்பனுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கன்னியப்பனும், அவரது மனைவியும் வீட்டிற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கன்னியப்பன் திண்டுக்கல் மேற்கு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்த படி சிறிது தூரம் ஓடிப்போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்