மாரண்டஅள்ளி அருகே, மணல் கடத்திய வேன் கவிழ்ந்து தொழிலாளி பலி - 2 பேர் படுகாயம்
மணல் கடத்தி சென்ற வேன் கவிழ்ந்து தொழிலாளி பலி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கொக்கிக்கல் சின்னாறு உள்ளது. இந்த ஆற்றுப்பகுதியில் இருந்து நேற்று காலை மினி வேனில் கொலசனஅள்ளியை சேர்ந்த பிரகாஷ் (வயது 22) என்பவர் மணல் கடத்தி வந்தார். பஞ்சப்பள்ளியில் இருந்து பாலக்கோடு நோக்கி வேன் வந்து கொண்டிருந்தது. மணல் பாரத்தின் மேல் கொய்யா பழங்களை மரப்பெட்டியில் வைத்து கொண்டு வந்து கொண்டிருந்தார். அந்த வேனில் கூலித்தொழிலாளிகள் சங்கர் மகன் சூர்யா (20), முத்து மகன் முனிராஜ் (48) ஆகியோரும் வந்தனர். நாராயணன்கொட்டாய் என்ற இடத்தில் வந்தபோது முன்பக்க டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது. இதில் முனிராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். சூர்யா, பிரகாஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.