திருவண்ணாமலையில் சட்டநகல் எரிப்பு போராட்டம் நடத்திய 80 விவசாயிகள் கைது
விவசாய நிலங்கள் வழியாக உயர்மின்கோபுரங்கள் அமைப்பதை எதிர்க்கும் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்டநகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 80 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் 1885-ம்ஆண்டு உருவாக்கப்பட்ட தந்தி சட்டத்தை கைவிடக்கோரி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை செயலாளர் ஸ்டாலின்மணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெங்கடேசன், செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி பிரகலநாதன் வரவேற்றார். சங்க நிர்வாகிகள், மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் 1885-ம் ஆண்டு சட்டத்தை கைவிட்டு, விவசாயிகளின் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மின் கோபுரத்திற்கும், கம்பி செல்லும் பாதைக்கும் மாத வாடகையும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். புதிதாக செயல்படுத்தும் திட்டங்களை கேபிள் மூலமாக செயல்படுத்த வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்ட பொய்வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்” என கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் விவசாயிகள் சிலர் சட்ட நகலை தீ வைத்து எரித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சில போலீசார் அவர்கள் எரித்த சட்ட நகலை பாய்ந்து பறித்து கைகளால் தீயை அணைத்தனர். எனினும் மற்ற போலீசார் முன்கூட்டியே வாளியில் தண்ணீர் வைத்திருந்தனர். அவர்கள் எரியும் நகலை கைப்பற்றி தண்ணீர் வாளிக்குள் போட்டு தீயை அணைத்தனர். இந்த சம்பவங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 80 விவசாயிகளை கைது செய்தனர்.