70 திருட்டு வழக்குகளில் ரூ.1 கோடி நகை-பணம், வாகனங்கள் மீட்பு - உரியவர்களிடம் போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா ஒப்படைத்தார்

70 திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.1¾ கோடி மதிப்பிலான நகை-பணம், வாகனங்களை உரியவர்களிடம் போலீஸ் ஐ.ஜி. கே.பெரியய்யா ஒப்படைத்தார்.

Update: 2019-09-18 22:30 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் நடந்த திருட்டு சம்பவங்களை கண்டறிந்து திருட்டு போன பொருட்களை மீட்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதன்படி பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டன.

அதன்படி ஈரோடு டவுன் உள்கோட்டத்தில் 13 வழக்குகளில் 2 லாரிகள், 2 கார்கள், ஒரு சரக்கு ஆட்டோ, 3 இருசக்கர வாகனங்கள், ரூ.9 லட்சத்து 54 ஆயிரத்து 900, 66 பவுன் நகைகள் ஆகியன மீட்கப்பட்டது. இதேபோல் பவானி உள்கோட்டத்தில் 17 வழக்குகளில் 2 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள், 2 செல்போன்கள், 71½ பவுன் நகை ஆகியனவும், கோபிசெட்டிபாளையம் உள்கோட்டத்தில் 17 வழக்குகளில் 6 இருசக்கர வாகனங்கள், ஒரு மடிக்கணினி, 46 பவுன் நகை ஆகியனவும், சத்தியமங்கலம் உள்கோட்டத்தில் 10 வழக்குகளில் ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள், ஒரு செல்போன், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், 19 பவுன் நகை, ஈரோடு ஊரக உள்கோட்டத்தில் 13 வழக்குகளில் 3 லாரிகள், ஒரு கார், 36 செல்போன்கள், 75 பவுன் நகை ஆகியனவும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் ரூ.1 கோடியே 76 லட்சத்து 15 ஆயிரத்து 400 மதிப்பிலான நகை, பணம், வாகனங்கள் மீட்கப்பட்டு உள்ளன.

இந்த மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஈரோடு அருகே ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் தலைமை தாங்கினார். கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜி.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கே.பெரியய்யா கலந்துகொண்டு திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் வழங்கி பேசினார். மேலும் அவர், திருட்டு வழக்குகளை விரைந்து கண்டுபிடித்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், ரொக்கப்பரிசும் வழங்கினார்.

ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய ஏ.டி.எம். மையத்தை போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா திறந்து வைத்தார். பின்னர் ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்றுகளையும் அவர் நட்டு வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சேகர், ரமேஷ், ராஜகுமார், ராஜூ உள்பட போலீசார் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்